6 நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
7 உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
8 நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 உன் சங்காரத்தை ஜாதிகள் மட்டும், நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்.
10 அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.
11 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்.
12 பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ஜனத்திரளை விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.