26 பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.
27 கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள்.
28 கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.
29 மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
30 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்.
31 ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,
32 சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள்.