எரேமியா 16:10-16 தமிழ்

10 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேனென்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,

11 நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.

12 நீங்கள் உங்கள் பிதாக்களைப் பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு, உங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடக்கிறீர்கள்.

13 ஆதலால், உங்களை இந்த தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.

14 ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,

15 இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக்கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

16 இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.