எரேமியா 28:14-17 தமிழ்

14 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.

16 ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.

17 அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.