எரேமியா 42:16-22 தமிழ்

16 நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்துவரும், அங்கே சாவீர்கள்.

17 எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

18 என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக் காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

19 யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.

20 உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள்.

21 நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்துக்கும் செவிகொடாமற்போனீர்கள்.

22 இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற ஸ்தலத்தில்தானே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.