எரேமியா 51:28-34 தமிழ்

28 மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.

29 அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்.

30 பாபிலோன் பராக்கிரம்சாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.

31 கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், யுத்தமனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,

32 அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.

33 பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப் போரடிக்குங் காலம்வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

34 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.