எரேமியா 52:8-14 தமிழ்

8 ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டுச் சிதறிப்போயிருந்தார்கள்.

9 அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத் தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.

10 பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.

11 சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு விலங்குகளைப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

12 ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.

13 அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.

14 காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.