எஸ்தர் 7:2-8 தமிழ்

2 இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

3 அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.

4 எங்களை அழித்துக்கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப் போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றாள்.

5 அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.

6 அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.

7 ராஜா உக்கிரத்தோடே திராட்சரசப்பந்தியை விட்டெழுந்து, அரமனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்.

8 ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பி வருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்து கிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.