எஸ்தர் 8:8-14 தமிழ்

8 இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டதைச் செல்லாமற்போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.

9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.

10 அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.

11 அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரே நாளிலே,

12 அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.

13 யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.

14 அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.