எஸ்றா 6:5-11 தமிழ்

5 அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டு வந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்த பொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச்சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளை தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.

6 அப்பொழுது தரியு ராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள்.

7 தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.

8 தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.

9 பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.

10 எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.

11 பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளை என்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் பிடுங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தமாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.