ஏசாயா 38:9-15 தமிழ்

9 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது:

10 நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.

11 கர்த்தரை, கர்த்தரை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளோடே இருந்து மனுஷரை நான் காண்பதில்லை.

12 என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்.

13 விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி,

14 நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.

15 நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.