ஏசாயா 66:7-13 தமிழ்

7 பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.

8 இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

9 பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.

10 எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.

11 நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்.

12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.