சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:9-15 தமிழ்

9 என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்.

10 உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமள தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!

11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.

12 என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.

13 உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,

14 நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்கார வனமாயிருக்கிறது.

15 தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.