9 எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் ஞானமும் என்னோடேகூட இருந்தது.
10 என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.
11 என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
12 பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான்.
13 இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன்.
14 ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரே விதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.
15 மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.