மீகா 1:4-10 தமிழ்

4 மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.

5 இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ?

6 ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன்.

7 அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப்போகும்.

8 இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.

9 அதின் காயம் ஆறாதது; அது யூதா மட்டும் வந்தது: என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.

10 அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு.