யாத்திராகமம் 7:19-25 தமிழ்

19 மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

20 கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.

21 நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது.

22 எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.

23 பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.

24 நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.

25 கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.