யோசுவா 6:1-7 தமிழ்

1 எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.

2 கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.

3 யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.

4 ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.

5 அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.

6 அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;

7 ஜனங்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான்.