3 அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
4 கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.
5 அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரை பண்ணினான்.
6 அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
7 அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.
8 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.
9 அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.