1 ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
2 அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள்.
3 அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.
4 அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள்.
5 விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.
6 ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
7 கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.