24 ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிறபடுக்கையும் தீட்டுப்படும்.
25 ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
26 அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
27 அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
28 அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.
29 எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
30 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.