8 அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
9 நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
10 உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
11 நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
12 என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
13 பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
14 செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.