லேவியராகமம் 6:12-18 தமிழ்

12 பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.

13 பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.

14 போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.

15 அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.

16 அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.

17 அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது.

18 ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.