அப்போஸ்தலர் 19:26-32 தமிழ்

26 இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.

27 இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப்போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான்.

28 அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள்.

29 பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்.

30 பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை.

31 ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.

32 கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.