கலாத்தியர் 1:6-12 தமிழ்

6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;

7 வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.

11 மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

12 நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.