யாத்திராகமம் 8:18-24 தமிழ்

18 மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ்செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது.

19 அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.

20 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.

21 என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும், உன் ஊழியக்காரர்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.

22 பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,

23 என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

24 அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டுஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.