1 சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன்அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.
2 அந்நாட்கள் மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், ஜனங்கள் மேடைகளிலே பலியிட்டு வந்தார்கள்.
3 சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.
4 அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.