10 அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.
11 அதற்குமுன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
12 அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று.
13 அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.
14 அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங்காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான்.
15 அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான்.
16 சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய்ச் சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை.