1 சாமுவேல் 30:13-19 தமிழ்

13 தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.

14 நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான்.

15 தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.

16 இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.

17 அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.

18 அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.

19 அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.