1 தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.
2 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்.
3 அன்று இராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
4 நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.
5 நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன்.