2 இராஜாக்கள் 20:13-19 தமிழ்

13 எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.

14 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான்.

15 அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.

16 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்.

17 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

18 நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

19 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.