2 இராஜாக்கள் 9:19-25 தமிழ்

19 ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான்.

20 அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.

21 அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன்தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.

22 யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்.

23 அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.

24 யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படத்தக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.

25 அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறிவருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.