3 சமுத்திரக்கரை துறையிலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிற தீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண சௌந்தரியவதி என்கிறாய்.
4 கடல்களின் நடுமையத்திலே உன் தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க் கட்டினார்கள்.
5 சேனீரிலிருந்துவந்த தேவதாருமரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
6 பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வாரிபலகைகளைச் செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்.
7 எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாயிருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இரத்தாம்பரமும் உன் விதானமாயிருந்தது.
8 சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டு வலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள்.
9 கேபாரின் முதியோரும் அதின் சாஸ்திரிகளும் உன்னில் கம்பத்துப் பார்க்கிறவர்களாயிருந்தார்கள்; சமுத்திரத்தின் சகல கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரரும் உன்னோடே தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.