26 அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.
27 அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள்.
28 அப்பொழுது மோசே: இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என் மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால்,
29 சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.
30 கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான்.
31 அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;
32 பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.