எரேமியா 11:17-23 தமிழ்

17 பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

18 அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரியக்காட்டினீர்.

19 மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.

20 சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.

21 ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:

22 இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள்.

23 அவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை; நான் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.