எரேமியா 13:20-26 தமிழ்

20 உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களைப் பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?

21 அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?

22 இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் வஸ்திரத்து ஒரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.

23 எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.

24 ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன்.

25 நீ என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

26 உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டாக எடுத்துப்போடுவேன்.