சங்கீதம் 19 தமிழ்

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.

3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.

4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூவுலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.

5 அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.

6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெம்மைக்கு மறைவானது ஒன்றுமில்லை.

7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாய் இருக்கிறது.

9 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.

10 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன.

11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.

12 தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்.

13 துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக்காரும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்,

14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்துக்குப் பிரியமாய் இருப்பதாக.