நியாயாதிபதிகள் 1:16-22 தமிழ்

16 மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சம்மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.

17 யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம்பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.

18 யூதா காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.

19 கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.

20 மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.

21 பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

22 யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.