4 என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்.
5 மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:
6 எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
7 அப்பொழுது மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய், அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்.
8 பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.
9 கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:
10 உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.