23 தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.
24 உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.
25 உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.
26 அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,
27 அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
28 அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான்.
29 ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.