அப்போஸ்தலர் 18:17-23 தமிழ்

17 அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.

18 பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியா தேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.

19 அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.

20 அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது அவன் சம்மதியாமல்,,

21 வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,

22 செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.

23 அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்.