21 அதினாலே யோராம் சகல இரதங்களோடுங்கூடச் சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தபோது, ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
22 அப்படியே யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் பண்ணினார்கள்; அக்காலத்தில்தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.
23 யோராமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
24 யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான்.
25 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய பன்னிரண்டாம் வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா ராஜாவானான்.
26 அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அத்தாலியாள்.
27 அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தங்கலந்திருந்தான்.