1 நாளாகமம் 28:7-13 தமிழ்

7 இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.

8 இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அனுபவித்து, உங்களுக்குப் பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தரமாய்ப் பின்வைக்கும்பொருட்டாக, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

9 என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

10 இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.

11 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும்,

12 ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்,

13 ஆசாரியரையும் லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், கர்த்தருடைய ஆலயப்பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான்.