ஏசாயா 44:22-28 தமிழ்

22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

23 வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபைமீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.

24 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

25 நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப்பண்ணுகிறவர்.

26 நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.

27 நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.

28 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.